Saturday, 16 October 2021

                         ஒரு மாவீரனின் மறைக்கப்பட்ட வரலாறு. 

                                                            பழனிபாபா



எண்பதுகளின் துவக்கத்திலிருந்து தொண்ணூறுகளின் மத்தி வரை ஆளும் வர்க்கதிற்கும் அடக்குமுறையாளர்களுக்கும் தூக்கம் கெடுத்த சிம்மசொப்பனம்...

தனக்கென பெரிய அமைப்பில்லை... தனியான அலுவலகமில்லை... பின்பற்றி வரக்கூடிய தொண்டர்படையில்லை... சொந்த சமுதாயதிற்குள்ளும் பெரியளவில் ஆதரவில்லை... எந்தவிதமான அதிகாரப் பதவியும் இல்லை... ஆனால் மேற்குறிபிட்ட அனைத்தும் இருப்பவர்களால் சாதிக்க முடியாத பலவற்றை சாதித்த தனிமனித இராணுவம்தான் பழனிபாபா...

கண்ணியத் தலைவர் காயிதே மில்லத் அவர்களின் மறைவிற்குப் பிறகு தமிழக இஸ்லாமிய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளை, உரிமைகளை அரசுக்குக் கொண்டு செல்லக்கூடிய வீரியமான தலைமை வெற்றிடமாகிப் போனபோது... முஸ்லிம்களுக்கு எதிராக சங் பரிவாரங்கள் தங்களது கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிட்டபோது தட்டிக் கேட்க யாருமே இல்லையா என்கிற ஏக்கப் பொருமல்கள் முஸ்லிம் சமுதாய சாமானிய மக்களிடம் பரவிவந்தபோது, தனது வீரியமான வீரமான உரைகளால் தமிழக முஸ்லிம்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தைரியமூட்டியவர் பழனிபாபா.

"நாங்கள் கைபர் போலன் கணவாய் வழியாக ஆடுமாடுகளை ஒட்டிக்கொண்டு இந்திய தேசத்திற்குள் அத்துமீறி நுழைந்த கூட்டமல்ல... இந்த மண்ணின் மைந்தர்கள்... ஆரிய அடிமைத்தன‌த்தில் இருந்து எம்மக்களை மீட்டெடுக்க இஸ்லாம் என்கிற மார்க்கத்தைத்தான் நாங்கள் இறக்குமதி செய்துகொண்டோம். மாறாக நாங்களே இறக்குமதி செய்யப்பட்ட மக்கள் அல்ல..." என வீரியமாக முழங்கி இஸ்லாமிய மக்களின் இந்தியப் பற்றை பறைசாற்றியவர் பழனிபாபா. செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்திட்டபோதும் தன்னைச் சுற்றி நடக்கும் அநீதிகண்டு வெகுண்டெழுந்து சுகபோக வாழ்க்கையைத் துறந்தவர். முஸ்லிம்களுக்கு எதிராக பின்னப்படும் சதிவலைகளுக்கு சொந்தகாரர்கள் யார் என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து களமாடினார் பழனிபாபா.

ஆம். பார்ப்பனியம் மட்டுமே முஸ்லிம்களுக்கு எதிரி; ஆரியம் மட்டுமே முஸ்லிம்களை இந்திய நாட்டின் வெகுஜன மக்களிடமிருந்து பிரித்தாள‌க்கூடிய சூழ்ச்சிகளை முன்னெடுக்கிறது என்பதை பாமரமக்களும் அறியும்வண்ணம் அழகாக தனது பாணியில் எடுத்துரைத்தார். விளைவு பார்ப்பனர்கள் தவிர்த்து தமிழர்கள் பழனிபாபாவை ஏற்றுக்கொள்ளத் துவங்கினார்கள். தந்தை பெரியார் மீதுகொண்ட பற்றால், அறிஞர் அண்ணாவின் கொள்கைகளில் கொண்ட ஈர்ப்பால் தன்னை அறிவிக்கப்படாத திமுக பேச்சாளராகவே ஆரம்பகாலத்தில் அடையாளப்படுத்திக் கொண்டார் பழனிபாபா. கலைஞர் கருணாநிதியின் தலைமைத்துவம் முஸ்லிம்களை கிள்ளுக்கீரையாகப் பயன்படுத்துகிறது என்பதை அறிந்து திமுகவின் துரோகத்தை அன்றே முழங்கி அமரர் எம்ஜிஆரின் அதிமுகவிற்கு ஆதரவானார்.

ஆரம்பகாலத்தில் அமரர் எம்ஜிஆரால் பெரிதும் மதிக்கப்பட்டவர்களில் பழனிபாபா அவர்களுக்குத் தனி இடமுண்டு. அமரர் எம்ஜிஆர் அவர்களுக்கு திமுகவினால் ஏற்ப்பட்ட பல சோதனைகளில் இருந்து விடுபட பழனிபாபா உதவினார் என்பது மறைக்கமுடியாத உண்மை. ஒரு கட்டத்தில் அமரர் எம்ஜிஆர் தனது ஆரிய விசுவாசத்தை வெளிக்காட்டத் துவங்கினார். சென்னை ஈகா திரையரங்க சாலையில் இந்து முன்னணியின் துவக்கவிழா நடைபெற்றது. அப்போது பேசிய அமரர் எம்ஜிஆர் "முஸ்லிம்களுக்கு முஸ்லிம் லீக் இருக்கும்போது இந்துக்களுக்கு இந்து முன்னணி அவசியம்" என்றார். அதனை வன்மையாகக் கண்டித்த பழனிபாபா எம்ஜிஆருடனான தனது உறவை முறித்துக்கொண்டார்.

தனது நாவன்மையின் மூலமாக அமரர் எம்ஜிஆரின் ஆற்றாமைகளை தமிழக மக்களிடம் தோலுரித்தார். விளைவு அதிமுகவின் ஆட்சி அடக்குமுறைகளினால் பழனிபாபா பலவழிகளிலும் பழிவாங்கப்பட்டார். இருப்பினும் தனது நிலையில் மிக உறுதியாகக் களமாடினர். எம்ஜிஆர் அவர்களே பழனிபாபா அவர்களின் செயல்களால் அச்சப்பட்ட காலங்களும் உண்டு. அந்த அச்சங்களின் காரணமாக பலமுறை பழனிபாபா பொய் வழக்குகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு எதிராக வாய்ப்பூட்டு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு அலுவலகங்களுக்குள் பழனிபாபா நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. எந்த சூழலிலும் தனது போர்க்குணத்தை இழக்காத பழனிபாபா எவருடனும் சமரசமில்லாத வீரத்தால் முஸ்லிம்கள் மட்டுமல்லாது ஏனைய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகமக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். திமுகவின் துரோகம், அதிமுகவின் நம்பிக்கை மோசடி இவற்றை முறியடிக்க பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுடன் கைகோர்த்தார். அவ்வேளையில் அண்ணல் அம்பேத்கரையும் தந்தை பெரியாரையும் அரசியல் குறியீடாகக் கொண்டு களமிறங்கிய மருத்துவர் இராமதாஸ் பழனிபாபா அவர்களின் முழுமையான அன்பைப் பெற்றார்.

மருத்துவர் இராமதாஸ் அவர்களால் முன் மொழியப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் பழனிபாபா அவர்களை வெகுவாக கவர்ந்தது. வடக்கே வன்னியர்கள்... தெற்கே தேவேந்திரர்கள்... பரவிவாழும் முஸ்லிம்கள் இணைந்தால் ஆட்சியையும் அதிகாரத்தையும் நம்மால் கைப்பற்ற முடியும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கொள்கைப் பிரகடனம் செய்தது பழனிபாபா அவர்களால்தான். முன்னைவிடவும் வீரியமாக பாமகவின் வளர்ச்சிக்கு களமாடினர் பழனிபாபா. பெருவாரியான முஸ்லிம்களும் தலித்துக்களும் பாமகவில் அங்கம்பெறக் காரணமே பழனிபாபா அவர்களின் எழுச்சிகரமான பரப்புரைகள்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.

பழனிபாபா தனது மார்க்கத்தில் தெளிவான நிலைப்பாடு கொண்டவர். எத்தகைய கடவுள் மறுப்பு கூட்டமானாலும் இஸ்லாத்தின் புனிதத்தன்மையை எடுத்துச் சொல்ல தயங்கியதில்லை. ஆனால் ஒரு குறுகிய வட்டத்திற்குள் தன்னையும் தனது சமூகத்தையும் அடைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை... நாம் வாழக்கூடிய நாட்டில் வெகுஜன மக்களுடன் கலந்து புரிந்துணர்வுடன் அதே வேளையில் இஸ்லாமிய கோட்பாடுகளில் எவ்விதமான சமரசத்திற்கும் இடமில்லாமல் வாழ அரசியல் பொருளாதாரம் போன்ற துறைகளில் முக்கியத்துவம் பெறக்கூடிய வழிமுறைகளை கற்றுத்தந்தவர் பழனிபாபா...

சமஷ்கிருத மொழியின் முகமூடியில் பார்ப்பனர் இல்லாத மக்கள் எப்படியெல்லாம் கீழ்த்தரமாக நடத்தபடுகிறார்கள், பார்ப்பனர்களால் பிறப்பால் வளர்ப்பால் அசிங்கப்படுத்தப்படுகிறார்கள் என்பதையெல்லாம் பட்டியலிட்டு பகிரங்கப்படுத்தியவர் பழனிபாபா என்பது மறைக்கப்பட்ட உண்மை. தாழ்த்தப்பட்ட சமூகமக்களின் விடுதலைக்காக அவர்களது மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாமல் செயல்பட்ட பழனிபாபா அவர்களால் ஈர்க்கப்பட்டுதான் ஜான்பாண்டியன், பசுபதி பாண்டியன் போன்றோரெல்லாம் பாமகவில் இணைந்தார்கள். வழக்கப்படியே பாமகவும் பழனிபாபா அவர்களுக்கு... இல்லை இல்லை முஸ்லிம்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் துரோகம் இழைத்தது. எப்போதும் இல்லாத வகையில் பழனிபாபா கவலைகொண்டார். காரணம் பாமகவை திமுக அதிமுகவைவிட அதிகமாக நம்பினார். பாமக நேரடியாகவே இந்துத்துவ சக்திகளுடன் நட்புகொண்டது பழனிபாபா அவர்களை கவலைக்குள்ளாகியது.

மாற்று அரசியலை சிந்திக்கவேண்டிய கட்டாயத்திற்கு பழனிபாபா பாமகவினால் கொண்டு செல்லப்பட்டார். அதற்கு தற்போதைய சாட்சியங்கள் நிறைய உண்டு... தேவைப்பட்டால் வெளிப்படுத்துவோம். தலித் மக்கள் ஆதிக்க சக்திகளால் தாழ்த்தப்பட்டார்கள். முஸ்லிம்கள் ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தலால் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொண்டார்கள். ஆக தாழ்த்தப்பட்டவர்களும்... தாழ்த்திக்கொண்டவர்களும் ஒருங்கிணைந்தால் மட்டுமே இத்தகைய துரோகங்களை வென்றெடுக்க முடியும் என்கிற தெளிவான மனநிலைக்கு பழனிபாபா வந்தார்.

முஸ்லிம்களின் மிகப்பெரிய கட்டமைப்பான முஹல்லாஹ் ஜமாத்துக்களை கூட்டமைப்பாக உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்தார். அதே வேளையில் ஜான்பாண்டியன், பசுபதி பாண்டியன் போன்றவர்கள் மூலமாக தலித் மக்களை ஒருங்கிணைக்கவும் செயல்திட்டங்களை வகுத்தார். ஒவ்வொரு ஊருக்கும் தானே தனிமனிதனாக சென்றார். முஸ்லிம்களின் முஹல்லாஹ் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்தார். தனது திட்டங்களை சொன்னார். ஏற்றுக்கொண்டார்கள்; இணைந்து களமாட தயாரானார்கள். தலித் மக்களை சந்தித்தார். இழிநிலை நீங்க சிறப்பான செயல்திட்டங்களை சொன்னார். தலித் மக்கள் பழனிபாபா அவர்களின் பின்னால் அணிவகுக்கத் தயாரானார்கள். தேர்தல் அரசியலை புறக்கணித்து தீவிரமாக மக்கள் விடுதலைக்காக களமாடிய திருமாவளவன் பழனிபாபா அவர்களின் கவனத்தை ஈர்த்தார். அவரையும் அழைத்து ஆலோசனைகளை மேற்கொண்டார். வெண்ணை திரண்டு வந்தது; ஆனால் பழனிபாபா என்கிற தாளி சமூகவிரோதிகளால் உடைக்கப்பட்டது.

ஆம்... ஒடுக்கப்பட்டோரும் ஒதுக்கப்பட்டோரும் ஒருங்கிணைந்து அதிகாரத்தை வென்றெடுப்போம் என்ற சமூகப்புரட்சியாளர் பழனிபாபா அவர்களின் கோஷம் ஆதிக்க சக்திகளின் உறக்கத்தை கெடுத்தது. பழனிபாபா என்கிற மாமனிதன், தனிமனிதப் போராளி படுகொலை செய்யபட்டார். சுமார் 238 வழக்குகள், 136 கைதுகள், 124 சிறைகள் இவற்றை எல்லாம் கடந்து மக்களின் உரிமைகளுக்காக கடைசி நிமிடம் வரை குரல்கொடுத்த ஒரு மாவீரன் கோடாளிகளால் குடல்சரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். தடா வழக்குகளில் சிறைபடுத்தப்படாமலேயே வழக்கை தவிடுபொடியாக்கிய வரலாறு பழனிபாபா என்கிற ஆளுமையற்ற அதிகாரமற்ற ஒரு தனிமனிதனால் மட்டுமே சாத்தியமானது... காரணம் பழனிபாபா என்றால் சத்தியம் உண்மை நேர்மை..
.
பழனிபாபா என்கிற தனிமனிதனை ஒழித்துவிட்டால் சாதியம் தழைத்தோங்குவதற்கான தடை அகற்றப்பட்டுவிடும்... முஸ்லிம்கள் முடங்கிவிடுவார்கள்... என்று மனப்பால் குடித்த கயவர்கள் இன்றைக்கு கலங்கிப் போய் நிற்கிறார்கள்... காரணம் ஒரு பழனிபாபாவை கொலைசெய்தார்கள்.... ஆனால் அவர் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பழனிபாபாக்கள் முளைத்து வந்துவிட்டார்கள்...

பழனிபாபா அவர்களின் வார்த்தைகள்தான் இன்றைக்கு முஸ்லிம் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களின் ஜீவ முழக்கம். இனத்தால் திராவிடர்கள்... மொழியால் தமிழர்கள்... தேசத்தால் இந்தியர்கள்... ஏற்றுக்கொண்ட மார்க்கத்தால் மட்டுமே நாங்கள் முஸ்லிமகள்... இது பழனிபாபா அவர்களின் கொள்கைப் பிரகடனம்... ஏற்க மறுப்பது அறீவீனம்...

மனிதனை மனிதனாக மாற்ற முயற்சித்த தந்தை பெரியாரை, அடிமை விலங்கை உடைக்க அரும்பாடுபட்ட அண்ணல் அம்பேத்கரை வாசித்த தமிழர்கள் பழனிபாபா என்கிற வரலாறையும் வாசிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.


 

Thursday, 21 April 2016

தெறியும் fanனும்- விஜயும் ஷாருக்கும்.


தெறி,fan படங்களுக்கு இடையே சில பல வித்தியாசங்களையும் ஒற்றுமைகளையும் கண்டு அறிந்தேன்.


1) fan, பாலிவுட் பாட்ஷா நடித்த படம். தெறி, பாட்ஷா படத்தை நினைவூட்டும் படம்.


2) ரெண்டுமே 2.5 மணி நேரம் ஓட. எனக்கு தான் மூன்று நாட்கள் திரையரங்கிலே வாழ்ந்த உணர்வு ஏற்பட்டது.
ஒரு திரைப்படம் 2 மணி நேரத்துக்கு மேலே போனால்.



3) காருக்கு எதுக்கு அச்சாணி?

















தெறிக்கு எதுக்கு ஏமி?


இந்த கதாபாத்திரத்த நம்ம வடிவுக்கரசிக்கிட்ட கொடுத்து இருந்தாலும், பின்னி பெடல் எடுத்து இருப்பாங்க!

தெறி படத்துக்கு ஏமி தேவையில்லை என்றால், fan படத்தில் ஒரு கதாநாயகி இருந்திருந்தால் நல்லா இருந்திருக்குமோ-னு தோணுச்சு.


4) ஒரு படத்தில் பாடல்களே இல்லை. இன்னொரு படத்தில், சூப்பர் ஹிட்  பாடல்கள் உண்டு. (வேறு படங்களின் சூப்பர் ஹிட் பாடல்கள்)

"சுந்தரி கண்ணால் ஒரு செய்தி"

"நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்....."

"என்னடி ராக்கம்மா"

"அலைபாயுதே கண்ணா




5) கலரும் கால்வாயும்





















தெறி படத்தில் கலர் எல்லாம் தெறிக்க விட்டு இருக்காங்க. தனது குருநாதர் ஷங்கர் போலவே அட்லியும், பாடல் காட்சிகளில், பெயர் வைக்காத கலரைகூட அள்ளி பூசிவிட்டு இருக்கிறார். ஷங்கர் போல் அளவாய் அழகாய் பயன்படுத்தி இருக்கலாம்.

















ஏய் இங்க பூசு. ஏய் அங்க  பூசு, " என்று கவுண்டமணியின் குரல் தான் எனக்கு கேட்டது.


கலர் கதற கதற தெறித்தது என்றால், fanனில் கால்வாயில் பறந்து பறந்து அடிக்கும் காட்சிகள் கண்ணை கட்டின. அதுவும் Croatia நாட்டில். அந்நாடு எங்கப்பா இருக்கு?

6) "எனக்கு இன்னொரு பெயர் இருக்கு" என்று சொல்லாத ஒரு காட்சி தெறியில் இடம்பெற, " சொல்லுங்க சொல்லுங்க...நீங்க bombayலே என்னாவ இருந்தீங்க?" என்பது தான் தெறியுன் கதை.
 
























ஒரு நடிகனை கடவுளாய் நினைக்கும் ஒரு ரசிகன் மும்பைக்கு செல்வது தான் fan திரைப்பட்டத்தின் கதை.

7) தெறி படத்தில் சில கதை சறுக்கல்கள் இருந்தாலும், ரசிக்க வைத்த விஷயங்கள்- விஜய், குழந்தை நைனிக்கா, விஜய்-சமந்தா காட்சிகள்.

குழந்தை நைனிக்காவின் அட்டகாசங்கள் அனைத்தும் தூள் கிளப்புது.
விஜய்-சமந்தா காதல் காட்சிகள், பழைய காதல் இளவரசன் விஜயை நினைவூட்டுகிறது.

























விஜய் இந்த வயதிலும் செம்ம கியூட்-டா, இளமை துள்ளலோடு மிளிர்கிறார்.

ஷாருக் போலவே.

ரசிகனாக நடிக்கும் ஷாருக், அப்படியே 25 வயது இளைஞன் போல் வளம் வருகிறார். இதுவரை அவர் படங்களில் காட்டாத ஒரு நடிப்பை இப்படத்தில் பார்க்கலாம்.






Thursday, 23 April 2015

சமூக வலைத் தளங்களிலும், இணையத்திலும் காய்ச்சி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. ஜெயகாந்தன் என்ற மிகப் பெரிய ஆளுமையின் பெயரை மிக மட்டமான முறையில் தனது சுய தம்பட்டத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார் என நாட்டின் பிரபலமான ஆங்கில நாளேடான தி இந்து சாடியிருக்கிறது. எத்தனை விருதுகள், எவ்வளவு புகழ் மாலைகள், மேடைகள் கண்ட கவிஞருக்கு இது தேவையா என்ற குரல்தான் ஏகோபித்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த தர்மசங்கடத்துக்கு வேறு யாரும் காரணமல்ல. அவரது சுபாவம்தான். வைரமுத்துவின் வழக்கமான அரசியல்தான் இது! 'இன்று நீ நாளை நான்' என்ற படத்தின் படப்பிடிப்பு துவங்க இருந்த சமயம். அந்த படத்தின் இயக்குனர் நடிகர் மேஜர் சுந்தர்ராஜன். தயாரிப்பாளர் பழ.கருப்பையா. இருவரும் படத்தின் இசைய்மைப்பாளராக இளையராஜாவை முடிவு பண்ண அவரை சந்திக்க சென்றிருக்கிறார்கள். இளையராஜாவும் அந்த படத்திற்கு ஒத்துக்கொள்ள, பாடல் கம்போசிங்கை வெளியில் எங்காவது வைத்துக்கொள்ளலாம் என்று இளையராஜா சொல்ல, ஊட்டி, கொடைக்கானல், கேரளா என்று ஆளுக்கொரு இடமாக சொல்கிறார்கள். ஆனால் இளையராஜாவே தேனியில் உள்ள வைகை அணைக்குச் செல்லலாம் என்று சொல்லவும் மூவருக்கும் ட்ரெயினில் டிக்கெட் ரிசர்வ் செய்யப்படுகிறது. அந்த படத்திற்கான பாடல்களை யாரை வைத்து எழுத வேண்டும் என்பதை இளையராஜா முடிவு செய்கிறார். இந்த தகவல் வைரமுத்துவின் காதுக்கு வருகிறது. பாட்டு எழுத வேண்டிய லிஸ்டில் தன்னுடைய பெயர் இல்லையென்பதை தெரிந்து கொள்கிறார். எப்படியாவது அந்த படத்தில் இடம் பிடிக்க தன்னுடைய அரசியலை அரங்கேற்ற தயார் ஆகிறார் வைரமுத்து. ஊருக்குப் புறப்படும் அந்த மூவரும் எந்த தேதியில் ஊருக்குப்போகிறார்கள் என்று தெரிந்து வைத்துக்கொண்டு அதே ட்ரெயினில் தனக்கும் ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்கிறார். இது இளையராஜா, மேஜர் சுந்தர்ராஜன், பழ.கருப்பையா மூவருக்கும் தெரியாது. ரயில் புரப்படும் அதே நாளில் அந்த கோச்சிற்கு வெளியே மூவருக்கும் காத்திருக்கிறார் வைரமுத்து. அதுவும் எப்படி எல்லோருக்கும் சாப்பிட டிபன் கேரியரில் விதவிதமான உணவுகளுடன். அவரை அங்கு பார்த்த இளையராவிற்கு பெரிய ஷாக். யார் இவரை வரச் சொன்னது என்பது போல பழ.கருப்பையா, மேஜர் சுந்தர்ராஜன் இருவரையும் பார்க்கிறார். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டர்களே தவிர பதில் சொல்லவில்லை. அப்புறம் வேறு வழியில்லாமல் பழ.கருப்பையாவே 'வந்துட்டார், நம்ம கூடவே வரட்டுமே' என்று சொல்ல அவர்களுடனே பயணித்திருக்கிறார் வைரமுத்து. இளையராஜாவிற்கு இதில் ஒப்புதல் இல்லையென்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. வந்ததற்காக அவருக்கு இரண்டு டியூன்களை கொடுத்து எழுத வைத்திருக்கிறார். ஒரு பிரபல வார இதழில் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த செய்தி ஒன்று. அப்போது பாரதிராஜாவின் புதுமைப்பெண் வெளியாகி இருந்த சமயம். அந்த படத்தில் வைரமுத்து எழுதிய பாடல் என்று ‘கஸ்தூரி மானே கல்யாண தேனே கச்சேரி பாடு' என்ற பாடல் வெளிவந்திருந்தது. ஆனால் அந்த பாடலை எழுதியது வாணியம்பாடி அருகே நாட்ராம் பள்ளி என்ற ஊரை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் என்ற உண்மையை போட்டு உடைத்தது. அந்த மாணவன் வைரமுத்துவிடம் முன்னுரைக்காக கொடுத்த கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டதாக தெரிய வந்தது. கவிஞர் அறிவுமதி அவர்களும் இதே போல் தன்னுடைய கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டதாக வைரமுத்துவின் பல பிரபலமான திரைப் பாடல்களை குறிப்பிட்டு ‘பா நிரை கவர்தல்' என்ற தலைப்பில் கையடக்கப் பிரதி ஒன்ரை வெளியிட்டார். லேட்டஸ்டாக வைரமுத்துவின் மூன்றாம் உலகப் போர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் ஜெயகாந்தன். அப்போது அவர், 'ஓசோனில் ஓட்டை விழுந்தால் உமக்கென்ன ஆயிற்று. அந்த ஓட்டையை வியாபாரமாக்குகிறாயா... படைப்புகள் மனிதர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். பயத்தை ஏற்படுத்தக்கூடாது" என்று வைரமுத்துவை அதே மேடையிலேயே வைத்து கம்பீர குரலில் கண்டித்தார். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் தன்னுடைய பாணியில் காய் நகர்த்துவது வைரமுத்துவின் கவி அரசியல். ஆனால் இந்த முறை அந்த அரசியல் அம்பலத்திற்கு வந்து விட்டது. எளிய மக்களின் உண்மை நிலையை தன் எழுத்துக்கள் மூலம் உலகுக்கு உணர்த்திய மாபெரும் படைப்பாளி ஜேகே. அவர் மறைந்த பிறகும் அவரது பெயரை யாரும் பொய்யாகக்கூட பயன்படுத்தக் கூடாது என்று இயற்கையே வெகுண்டெழுந்தது போலத்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது!

வைரமுத்துவிற்க்கு....

வைரமுத்து..... இந்த வார்த்தை என் இளமைக்கால இலக்கிய வாசலை திறந்து வைத்தது...எனக்கு தமிழ் மேல் தனி பற்று உண்டாக்கியது இவர் வரியை வாசித்தேன் என்பதை விட சுவாசித்தேன் என்பதே மிகச்சரி! நிற்க.  ஆனால் உம்மை எனக்கு அறிமுகப்படுத்தியது என் ராஜ இசை..   
              விழியில் விழுந்து இதையம் நுழைந்து உயிரில் கலந்த உறவே.... இந்த பாடல் இசைகோர்ப்பு முடிந்ததும் என் இளையராஜா உம்மை கட்டித்தழுவி முத்தம் கொடுத்ததாக  உங்கள் வார்த்தையில் இருந்து அறிந்தேன் நானும்தான்....

என்று எங்கள் ராஜாவை எதிர்த்து எதிர் வரிசையில் இருந்து குரல் கொடுத்தீரோ ! அன்றிலிருந்து உங்கள் மீதிருந்த  மிகப்பெரிய மரியாதையை குறைத்துக்கொண்டேன்.. உங்கள் எழுத்துக்களை எட்டி நின்றே பார்த்தேன், என் வீட்டு அலமாரி உங்கள் புத்தகங்களை வரவேற்க்க மறுத்து விட்டன..
உங்கள் கவிதை புத்தகத்தில் இளையராஜாவுக்கு எழுதிய கடிதத்தில்  உங்கள் அகங்கார வார்த்தை ( என்னோடு இணைந்துதான் வெற்றி பெற முடியும் என்ற நிலை உனக்கும் இல்லை உன்னோடு இணைந்துதான் வெற்றி பெற முடியும் என்ற நிலை எனக்கும் இல்லை) இப்போது நீங்கள் அடைந்துள்ள வெற்றி நீங்கள் ஏறி நிற்கும் உயரம் அத்தனையும் இளையராஜா என்ற ஒரு தனி மனிதனால் மட்டுமே என்ற உண்மை உங்களைத் தவிர உலகுக்கு தெரியும்..

ஆனால் தற்போது உங்கள் வாழ்வில் சூழ்ந்துள்ள இந்த அவமான மேகம் விரைவில் விலக வேண்டுமென்றே என் மனம் விரும்புகிறது..

              இப்படிக்கு - ஒரு காலத்தில் உங்கள் வரிகளின் வாசகன்....

Wednesday, 15 April 2015

     Trust (2010): ஆன்லைன் சாட்டிங் வக்கிர மிருகங்கள்.

Trust (2010) அமெரிக்காவில்  இளம் டீன் ஏஜ் பெண்கள் எப்படி ஆன்லைன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க படுகிறார்கள் என்பதை கொஞ்சம் கூட எதார்த்தத்தை மீறாமல் சொல்லும் படம். ஆன்லைன் சாட்டிங் நம்மில் அனைவரும் செய்து இருப்போம். முகம் தெரியாத நிறைய நபர்களை நாம் சந்திக்க ஒரு வாய்ப்பாய் அமைக்கிறது ஆன்லைன் சாட்டிங். முகம் தெரியாமல்/முகத்தை மூடி செய்ய படும் வாய்ஸ் சாட்டிங்கில் ஆண் பெண் போலவும், பெண் ஆண் போலவும், வயதான ஆள் தான் டீன் ஏஜ் பையன் போலவும் நம்முடன் சாட் செய்ய நிறையவே வாய்ப்பு  இருக்கிறது.


தவறான சாட் முலம் பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க படுவதை, பெண்கள் ஏமாற்ற படுவதை நியூஸ் பேப்பரில் படித்து இருப்போம். நமக்கு அது வெறும் செய்தி தான், ஆனால் அந்த பெண் எந்த மாதிரியான மன உளைச்சலுக்கு ஆளாக்க படுகிறாள், அவளது குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்ன என்பதை, கண்டிப்பாய் முன்றாவது நபர்கள் ஆகிய நாம் உணர முடியாது. ஆன்லைன் சாட்டின் விளைவாக ஒரு அமெரிக்க  டீன் ஏஜ் பெண் எப்படி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க பட்டு உடைந்து போகிறாள், எப்படி பட்ட மன உளைச்சலுக்கு ஆளாகிறாள், அந்த மன உளைச்சலில் இருந்தது எப்படி மீள்கிறாள் என்பதை அற்புதமாய் சொல்லும் படம் தான் Trust.
படத்தின் முக்கிய கதாபாத்திரமான அனே (Annie) 14 வயதை நெருங்கும் அமெரிக்க டீன் ஏஜ் பெண். முதல் காட்சியில் அனே நெட்டில் சிலருடன் தனது ஸ்கூல் வாலிபால் செலக்ஷன் பற்றி ஆன்லைன் குரூப் சாட் செய்வது போன்று படம் ஆரம்பிக்கும், அந்த சாட்டில் தன்னுடன் தவறாக பேசும் நபரை அனே உடனே பிளாக் செய்து விடுவாள். இதில் இருந்தது தவறாக பேசுபவர்களை கண்டு பிடிக்கும் அளவுக்கு வளர்ந்த பெண் அனே என்பது நமக்கு புரியும். அந்த குரூப் சாட்டில் சார்லி என்பவன் மட்டும் மிகவும் நல்லவன் போல் அனேவிற்கு வாலிபால் விளையாட்டு பற்றி டிப்ஸ் தருவான். அனேவும் ஸ்கூல் வாலிபால் டீமில் விளையாட செலக்ட் ஆகி விடுவாள். மறுநாள் சாட்டில் சார்லி அவளது செலக்ஷன் பற்றி கேட்க, அனேவிற்கு சார்லி மீது நல்ல அபிப்பிராயம் வருகிறது. இருவரும் சாட்டில் பேச ஆரம்பிக்கிறர்கள். சார்லி தனக்கு 15 வயது தான் ஆகிறது, தானும் ஸ்கூல் வாலிபால் பிளேயர் என்று சொல்லுவான். இப்படியாக சார்லி மற்றும் அனேவின் நட்பு சிறு புள்ளியில் ஆரம்பித்து வளர்கிறது.

இதற்கிடையே அனேவின் தந்தை வில் (Will) அவளது 14 ஆவது பிறந்த நாள் அன்று Apple Mac புக் ஒன்றை பரிசாக தருவார். Mac புக் முலம் அனே சார்லியுடனான தனது சாட்டிங்கை தொடர்கிறாள். அப்பொழுது சார்லி தான் 15 வயது பையன் இல்லை, தனக்கு 20 வயது ஆகிறது என்று சொல்லுவான். அனேவும் அதை பெரிய விஷயமாக எடுத்து கொள்ள மாட்டாள். சிறிது நாட்களில் இருவரும் டீப் சாட்டிங்கில் இறங்கி விடுவார்கள். பிறகு சார்லி தனக்கு 20 வயது இல்லை, தான் 25 வயது வாலிபன் என்று ஒரு புகைபடத்தை அனுப்புவான். அனே அப்பொழுதும் அவனை மன்னித்து விடுவாள்.
இருவரது சாட்டிங் எந்த தடையும் இன்றி வளர்கிறது. ஒரு நாள் சார்லி நாம் இருவரும் சந்தித்தால் என்ன என்று சொல்லி, அந்த சந்திப்புக்கு அனேவிடம் சம்மதம் வாங்கி விடுவான். அந்த ஊரில் இருக்கும் ஒரு மாலில் இருவரும் சந்திப்பது என்று முடிவு செய்கிறார்கள். அந்த மால்க்கு சென்று சார்லியை பார்த்த பிறகு தான் அனேவிற்கு தெரிய வரும், சார்லி 25 வயது வாலிபன் கிடையாது, 35 வயதை கடந்த நடுத்தர ஆள் என்பது. மால்லில் இருந்தது வெளியேற அனே செய்யும் முயற்சி, சார்லியின் நயவஞ்சக பேச்சால் தடுத்து நிறுத்த படுகிறது. மால்லில் இருந்தது அனேவை சார்லி ஒரு ஹோட்டல் அறைக்கு அழைத்து சென்று அவளை பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறான்.

அந்த சம்பவத்தினால் மனம் சோர்வடையும் அனே, அதை பற்றி தனது உயிர் தோழியான பிரிட்டானியிடம் சொல்கிறாள். ஆனால் பிரிட்டானி அந்த சம்பவத்தை அவர்கள் படிக்கும் ஸ்கூல் நிர்வாகத்திடம் சொல்லி விடுவாள். அங்கிருந்து லோக்கல் போலீஸ், பிறகு FBI வரை விஷயம் சென்று விடும். அனே ஒரு வயதான நபரால் ஏமாற்றி கற்பழிக்கப்பட்டு இருக்கிறாள் என்பதை கேள்விப்பட்டு வில் (Will) உடைந்து விடுவார். FBI விசாரணையில் சார்லி இது போல் பல பெண்களை ஏமாற்றி இருப்பது தெரிய வரும். அதுவும் எந்த ஒரு தடயமும் விடாமல் தவறை சரியாக செய்பவன் சார்லி என்பது தெரியவரும். IP அட்ரெஸ், கிரெடிட் கார்டு, போட்டோ என்று ஒரு தடயம் கூட கிடைக்காது.
 
 
சாதாரண ஆக்சன் படமாக இருந்தால், பாதிக்க பட்ட பெண்ணின் அப்பா கதாபாத்திரம் தன் பெண்ணை மோசம் செய்தவனை துரத்தி துரத்தி கொலை செய்வது போல் இருந்தது இருக்கும். அது நடைமுறை சாத்தியம் இல்லாத செயல். அப்படி செய்து இருந்தால் பத்தோடு பதினொன்று என்று இந்த படம் ஆகி இருக்கும்.

ஆனால் Trust படத்தில் அந்த மாதிரி எதுவும் செய்யாமல், பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்க பட்ட பெண் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், அவர்களது குடும்பம் சந்திக்கும் சிக்கல்கள் பற்றி காட்டி இருப்பார் இயக்குனர் டேவிட் சுவிம்மர் (David Schwimmer). தன் அன்பு மகள் யாரோ ஒருவனால் ஏமாற்ற பட்டு விட்டாளே என்று  அனேவின் தந்தை கதாபாத்திரமான வில் கதறும் காட்சிகள் நம்மை நிறைய இடங்களில் உலுக்கி எடுத்து விடும். படம் நகர நகர நாமும் அவர்களது குடும்பத்தில் ஒரு உறுப்பினர் ஆகி விடுவோம். அந்த குடும்பத்துக்கு எப்படியாது ஆறுதல் சொல்ல வேண்டும் என்று நம்மை ஏங்க வைத்து விடுவார் இயக்குனர். படத்தின் இறுதி காட்சியில் வில் மற்றும் அனே இடையே நடைபெறும் உரையாடல்கள் உலக தரமானவை. யாரையும் பழி வாங்காமல், யாருக்கும் அப்படி இரு, இப்படி இரு என்று அட்வைஸ் செய்யாமல் என்ன நடந்தாலும் Life has to Go On என்ற தத்துவத்துடன் படம் முடியும்.
 
 
படம் முடிந்து கிரெடிட்ஸ் போடும் போது சார்லி என்பவன் யார் என்று காட்டப்படும். அந்த காட்சியை பற்றி ரொம்ப நேரம் நினைத்து கொண்டு இருந்தேன். எனக்கு தோன்றியது சார்லி என்பவன் சமுகத்தில் முலையில் யாருக்கும் தெரியாமல் ஒளிந்து வாழும் மிருகம் கிடையாது, அவன் சமுகத்தின் உயர்ந்த இடத்தில் கூட இருக்கலாம், எங்கும் இருக்காமல் எதிலும் இருக்காமல், யாராகவும் இருக்காமல்...

போன வருடம் இணையத்தில் ஒரு பிரச்சனை வெடித்தது, சாரு நிவேதிதா என்கிற எழுத்தாளர்/பிளாக்கர் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக பேசி விட்டார் என்ற சர்ச்சை வெடித்தது. அது உண்மையா என்று கூட எனக்கு தெரியாது. அனைவரும் சாரு நிவேதிதாவை அவர் சாட்டில் பேசியதை விட மிகவும் ஆபாசமாக பேசினார்கள். அந்த பெண்ணின் மனநிலையில் இருந்தது யோசித்து பார்த்தவர்கள் மிகவும் சில பேரே. எனக்கு இந்த படம் பார்த்த உடன் அந்த பெண்ணின் (அது பெண்ணே கிடையாது என்றும் சில பேர் சொன்னார்கள்) மன நிலையை யோசித்து பார்த்தேன், ஒரு கனம் என் உடம்பு நடுங்கி விட்டது. அது தான் Trust டின் தாக்கம்.

வாய்ப்பு கிடைத்தால் இந்த படத்தை கண்டிப்பாய் பாருங்கள். முழு படத்தையும் youtube யில் காண இங்கு கிளிக் செய்யவும்.

Trust: What Ever happens Life has to Go On.